எனது பயணம்

என்னில் ஏதோ ஆனந்தமே

எனக்குள் கண்டேன் ஏகாந்தமே

எங்கே இருக்கிறேன் நானே

என அறியாது திகைக்கிறேனே



அவ்வப்போது எனக்குள்ளே

ஏதோ வந்து சேருகிறதே

என்னவென்று அறியேனே

அதில்லாமல் தளர்கிறேனே



பலப் பல குரல்கள்

அடிக்கடிக் கேட்க

அதிகமாகக் கேட்பது

ஒரு குரல் மட்டுமே



அந்தக் குரலும்

எனக்கு விருப்பமான

மிக நெருக்கமான

குரலாயிருக்கிறதே



சப்தமான பயணங்களுக்கிடையிலே

எனது பயணம் சப்தமின்றி

நிசப்தமாகவும் சில சமயங்களிலே

நீண்டுத் தொடர்கிறதே



எனை , ஏதோ

அழுத்தும் போதெல்லாம்

விருப்பமான அக்குரல்

சன்னமாகக் கேட்கிறதே



நான் தான், உன் அம்மா

நீ தான் என் செல்லம்

இது உன் அப்பா

அது தாத்தா , பாட்டி


இது அண்ணன்

அது அக்காவென

பல குரல்களுக்கேற்ப

அறிமுகம் செய்கிறதே



என்னாயிற்று இன்று

நிதமும் கேட்கும்

குரல்களுக்கிடையே கேட்காத

குரல்களும் பயணிக்கிறதே



சரிகின்றேன் , சரிகின்றேன்

எனது விருப்பக் குரல்

இன்று முற்றிலும்

வித்தியாசமாக ஒலிக்கின்றதே


இதென்னக் கூசுகிறதே

என்னைச் சுற்றிலும் பலர்

எதையோ என்மேல் அழுத்தி

தலைகீழாகப் பிடித்தே



பின்னால் தட்ட , தட்ட

வலியால் நான் ம் ம் ம் மாவென

சுற்றி இருப்பவர் இது உன்

அம்மாவென அறிமுகம் செய்ய



எனக்குப் பிடித்த அந்தக் குரல்

செல்லமென எனையழைத்து

தொட்டதுமே மகிழ்ந்தேனே

புது நிலையை அடைந்தேனே